search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சநீதிமன்றம் தீர்ப்பு"

    காவிரி நீர் பங்கீடு வரைவு திட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. #CauveryIssue #CauveryDraftScheme #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்திருந்தது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்தது.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. அதன்படி திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இதையடுத்து, நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது.

    அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயரிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.



    இறுதி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும் என முன்னர் இருந்த நிலையில், தற்போது அது திருத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆணையத்திடம் இருக்கும். ஆணையத்தின் முடிவை மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை எனில் மத்திய அரசை நாடலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    அதேசமயம், கர்நாடக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை என்றும், மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயல்பாட்டில் தலையிடுவதாக உள்ளது என்றும் கூறியுள்ளது.

    இந்நிலையில், காவிரி நீர் பங்கீடு வரைவு திட்ட வழக்கின் தீர்ப்பு இன்று மதியம் 2 மணிக்கு உச்சநீதிமன்றம் வழங்க உள்ளது. திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #CauveryIssue #CauveryDraftScheme #CauveryManagementAuthority
    ×